Friday, January 27, 2017

வெற்றியை நோக்கி … 5

தனித்துவமே தனி மனித அழகு

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒரு குணம் உண்டு. அது, அடுத்தவரை அல்லது எதிராளியை தனக்கு அடி பணிய வைத்து விட வேண்டும். அடுத்தவர்களை பிட்டுக் களிமண்ணாக பார்ப்பதோடு அந்த களிமண்ணை தனக்கு ஏற்ற வடிவத்தில் பதுமையாக்கி விட வேண்டும் என துடிக்கின்றனர். இதையே களிமண்ணாக கருதப்படும் நபரும் நினைக்கும்போது முரண்பாடு தலை தூக்குகிறது. அதன் விளைவாக எழும் வார்த்தைகளே, ‘என்னால் ஒத்துப்போக முடியவில்லை’. உண்மையில், இயற்கைக்கு மாறான குணம் இது. இயற்கை படைத்த ஒரு மனிதனை மற்றொரு மனிதன் செயற்கையாக எப்படி மாற்ற முடியும்?

இந்த உலகில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களிடம் கூட குண வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பெற்றோர் வழியாக குறிப்பிட்ட அளவும் தாத்தா, கொள்ளுத்தாத்தா என பரம்பரை வழியாக குறிப்பிட்ட அளவிலும் குணம் வந்து சேரும் என்கிறது, விஞ்ஞானம். ஒரே வீட்டில் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே கூட வேறுபாடுகள் சகஜம். உண்மையில் உள்ளம், தோற்றம், மரபு என பல்வேறு ரீதியில் மனிதர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டு இருக்கிறார்கள்.

ஒரு பொருளை வேண்டாம் என நீங்கள் ஒதுக்கி வைக்கும்போது, அந்த பொருளை கிடைப்பதற்கு அரிய பொருளாக மற்றொருவர் கருதிக் கொண்டு இருப்பதை அறிய மாட்டீர்கள். அது, உங்களுக்கு தானாக வந்து கிடைத்த அருமையான வேலையாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடிக்காத வண்ணம் கொண்ட சாதாரண உடையாகவும் இருக்கலாம்.
கணிதவியலில் நிகழ்தகவு (பிராபபிளிடி) என்ற ஒரு பாடம் உண்டு. அதாவது, எந்தவொரு விஷயத்திலும் எந்த அளவுக்கு நிகழ்வுகள் நடைபெற சாத்தியம் உள்ளது என்பதை குறிக்கும் கோட்பாடே நிகழ்தகவு. அந்த கோட்பாட்டின்படி வெறும் 30 நாணயங்களை சுண்டி விடுவதாக வைத்துக் கொண்டாலே கோடிக்கணக்கான நிகழ்தகவு கிடைக்கும். எனவே, உலகில் உள்ள 700 கோடி மக்களும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பதில் வியப்பில்லை.

வித்தியாசங்களில் தான் இந்த உலகமே அழகாக மாறி இருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் பார்க்கும் பொருட்கள் உட்பட அனைத்துமே ஒரே மாதிரியாக அமைந்து விட்டாலோ அல்லது உங்கள் ரசனைக்கு ஏற்றவாறே அமைந்து விட்டாலோ எவ்வளவு காலத்துக்கு அதை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியும். நிச்சயமாக, ஒரு கட்டத்தில் உங்களுக்கு அது போரடித்துவிடும். எனவே, ஒவ்வொரு வேறுபாட்டையும் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும், மனிதர்களின் மாறுபாடான குணங்கள் உட்பட.

ஒவ்வொரு மனிதனின் குணமும் அவ்வப்போது மாறுபடும் இயல்பு கொண்டது. புறச் சூழ்நிலை நன்றாக அமைந்தால் ஒரு மனிதனை வெற்றியாளனாக மாற்றி விடும். ஒவ்வொரு மனிதனும் சூழல்களின் கூட்டால் உருவாக்கப்படுபவர்களே. இதைத் தான், எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.. என பாடி வைத்துள்ளனர். அன்னை மட்டும் அல்ல. ஐம்புலன்கள் வழியாக நுழையும் ஒவ்வொரு விஷயங்களும் அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு மனிதனை மாற்றி அமைக்கின்றன. கேட்கும் பாடல், படிக்கும் பாடம், புத்தகங்கள், நண்பர்கள் என ஒவ்வொன்றும் மனிதர்களின் குணங்களை அழகுறவோ அல்லது அழகற்றதாகவோ செதுக்கும் உளிகளே.

பெற்றோர் கூறும் அறிவுரை, பள்ளிகளில் போதிக்கும் ஒழுக்கம், சமூகமும் நண்பர்களும் கற்றுத்தரும் விஷயங்கள், ஆன்மிக சொற்பொழிவு, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் வாயிலான அறிவுசார் தகவல் என ஒவ்வொன்றும் மனித பண்புகளை மாற்றும் புறச் சூழ்நிலைகளே. இத்தகைய புறச்சூழலை மிகச் சரியாக உள்வாங்கினால் நாளடைவில் அதுவே வெற்றியாளராக மாற்றும். நல்ல உடல் வலிமை உடைய ஒருவனுடைய மனதை பலவீனமாக்கி செயலற்றவனாக மாற்றவும் சமூக சூழ்நிலையால் முடியும்.

மனம் என்பது நன்கு பதப்படுத்தப்பட்ட நிலம். அதில் எதை விதைத்தாலும் நன்றாக துளிர் விட்டு வேர் பிடிக்கும். நல்ல விதைகள் விதைக்கப்பட்டால் பயன் தரும் சோலையாகும். மோசமான விதைகள் தூவினால் கள்ளி காடாக மாறிப்போகும். எனவே, உங்களுடைய புறச்சூழ்நிலையை, எண்ணங்களை, நோக்கத்தை நல்ல விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய குணாதிசயங்கள் குறித்து கவலை அடைந்து அவர்களை திருத்த முயற்சிப்பது உங்களின் கால விரயமாகவே முடியும்.

தோல்வியில் தைரியத்தையும் வெற்றியில் அமைதியையும் பின்பற்றுங்கள். மற்றவரை விட அதிகமாக அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். மற்றவரை விட அதிகமாக வேலை செய்யுங்கள். மற்றவரை விட குறைவான எதிர்பார்ப்பை வைத்திருங்கள். மிகப்பெரிய பூட்டையும் சிறிய சாவியே திறக்கிறது. அதுபோல, எளிமையான வார்த்தைகள் தான் பெரிய சிந்தனைகளை வெளிக் கொண்டு வருகின்றன. எண்ணங்களே வாழ்க்கையின் ஏணிப்படி.
மணம் வீசும் மலர்களை பாருங்கள். மல்லிகை, முல்லை, இருவாட்சி என ஒவ்வான்றும் தனக்கென தனித்துவமான மணம், தோற்றத்துடன் இருக்கின்றன. நிறைந்த சபைதனில் தனக்கென தனித்துவமான திறமை இருந்தால் மட்டுமே குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்க முடியும். எனவே, ஒவ்வொருவரும் தனக்கென தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டு வெற்றி என்னும் பாதையில் மலர்ந்து மணம் வீசுங்கள். 

(வெற்றி பயணம் தொடரும்…)
Post a Comment