= வை.ரவீந்திரன்.
குடியரசு நாடாக 1950ம் ஆண்டில் இந்தியா மாறியதும் சட்ட
மேலவையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை
என்றாலும் சட்ட மேலவை என்பது நிரந்தர அமைப்பு, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் 3
ஆண்டுக்கு ஒருமுறை மாற வேண்டும், சட்டப்பேரவை இரு அவைகள், ஆளுநர், பாராளுமன்றம் என
அனுமதி பெற்றால் மட்டுமே மேலவையை கலைக்க முடியும் என்பது போன்ற முக்கிய அம்சங்கள் அமலாகின.
1952ம் ஆண்டில் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர்
எண்ணிக்கை 72. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் பிரிந்த பிறகு தமிழக பகுதிகளை
மட்டும் கொண்ட சென்னை மாகாணத்தில் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) எண்ணிக்கை 63
ஆக குறைந்தது. 1957 முதல் 1986ம் ஆண்டில் தமிழக சட்ட மேலவையின் இறுதி காலம் வரை
இதுவே நீடித்தது.
இந்த 63 பேரில் 21 பேரை எம்எல்ஏக்களும் 21 பேரை
உள்ளாட்சி பிரதிநிதிகளும், 6 பேரை பட்டதாரி ஆசிரியர்களும், 6 பேரை பட்டதாரிகளும்
தேர்வு செய்வார்கள். 9 பேர் நியமன உறுப்பினர்கள். பாராளுமன்றத்தில் உள்ள
மாநிலங்களவை போன்ற அமைப்பு என்பதால் இதில் உறுப்பினராக (எம்எல்சி) இருந்தாலே
ஒருவர் அமைச்சர் ஆகலாம். அவ்வளவு ஏன்...? முதல்வராகவும் முடியும்.
1952ம் ஆண்டில் ராஜாஜியும், 1967ம் ஆண்டில் அண்ணாவும் அதுபோன்று
முதல் அமைச்சர் ஆனவர்கள் தான். 1962ம் ஆண்டில் இந்த அவையின் உறுப்பினராக புரட்சி
தலைவர் எம்ஜிஆர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவையில்
தான் 1951ல் எம்எல்சி ஆனார், கே.பி.சுந்தராம்பாள். அதன் மூலம் இந்தியாவில் முதன்
முதலில் மக்கள் பிரதிநிதி பதவியை பெற்ற திரை நட்சத்திரம் என்ற பெயர் அவருக்கு
கிடைத்தது.
மூதறிஞர் ராஜாஜி, சிலம்பு செல்வர் ம.பொ.சி., திராவிட
இயக்க தலைவர் சி.பி.சிற்றரசு போன்ற பெரிய தலைவர்கள், சென்னை சட்ட மேலவை தலைவர்களில்
முக்கியமானவர்கள். இந்த சபையின் இறுதிக் காலம் 1986ம் ஆண்டு நெருங்கியது.
(நினைவுகள் சுழலும்)
No comments:
Post a Comment