=வை.ரவீந்திரன்.
தமிழகத்தில்
1967ம் ஆண்டு தேர்தலில்தான் கார் மற்றும் பிரச்சார வேன்களை அதிகமாக பயன்படுத்தும்
வழக்கம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்வது எம்ஜிஆர் பாணி. அப்போதெல்லாம்,
ஒரே நாளில் தேர்தல் நடத்துவது இல்லை. 1952ம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் ஜனவரி
மாதத்தில் 9 நாட்கள் (9 கட்டமாக) நடந்தது. பின், அது படிப்படியாக குறைந்து 1967
தேர்தல் மூன்று கட்டமாக பிப்ரவரியில் நடந்தது.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக 174
தொகுதிகளில் திமுக நின்றது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் முன்பு ஜனவரி 12ம் தேதி எம்ஆர்
ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார். தேர்தலில் இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியது. பல்வேறு பிரச்சினைகளுடன்
எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில்
சுருட்டி எறிந்தது.
தேர்தல் முடிவில், 179 தொகுதிகள், திமுக கூட்டணி வசமானது.
திமுக மட்டும் தனியாக 137 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 51 இடங்கள் மட்டுமே
கிடைத்தன. அப்போது, இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம்
காங்கிரஸ் பறிகொடுத்தது. அதில், தமிழகத்தில் மட்டும் தான் அறுதி பெரும்பான்மையுடன்
எதிர்க்கட்சி ஆட்சி அமைந்தது. முன்னதாக, 1957ல் முதன் முதலில் கேரளாவில் காங்கிரஸ்
அல்லாத கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1967 தோல்விக்கு பிறகு,
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னமும் கனவாகவே நீடிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் 1200 வாக்குகளில் காமராஜரும், தமிழக
முதல்வராக இருந்த பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர்.
பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகவனை தவிர அனைத்து அமைச்சர்களுமே தோல்வியை
தழுவினர். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட்
தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில், தென்சென்னை தொகுதியில் இருந்து எம்பியாக
அண்ணா வெற்றி பெற்றிருந்தார். தனிப் பெரும்பான்மையுடன் திமுக வென்றதை தொடர்ந்து, எம்பி
பதவியை ராஜினாமா செய்தார் அண்ணா. பிறகு, தமிழக சட்ட மேலவை உறுப்பினராகி (எம்எல்சி)
1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில்
திராவிட கட்சிகளின் அசைக்க முடியாத ஆதிக்கம் ஆரம்பமானது.
அண்ணா தலைமையிலான தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல்
அமைச்சரவையில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உட்பட 9 பேர் அமைச்சராகினர். ஸ்ரீவைகுண்டம்
தொகுதியில் இருந்து தேர்வான நாம் தமிழர் கட்சி தலைவர் சி.பா. ஆதித்தனார்,
சபாநாயகரானார்.
(நினைவுகள் சுழலும்...)
(நினைவுகள் சுழலும்...)
No comments:
Post a Comment