= வை.ரவீந்திரன்.
சுதந்திரம்
பெற்ற பிறகு, இந்தியாவில்
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற நடைமுறையில் தமிழகத்தை பொறுத்தவரையிலும் 1971
வரை எந்த இடையூறும் நிகழவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது பொதுத் தேர்தல்
1972ம் ஆண்டு தான் நடந்திருக்க வேண்டும். ஆனால், மூத்த தலைவர்களின் அதிருப்தியால்
காங்கிரஸ் பிளவுபட்டு இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாகி நின்றது.
எனவே, பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தி தனது பலத்தை நிரூபிக்க
பிரதமர் இந்திரா விரும்பினார்.
இதையடுத்து,
இந்திய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அண்ணா மறைவையடுத்து முதல்வரான கருணாநிதி,
தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் அத்துடன் சேர்த்து நடத்த முன் வந்தார். அதனால், தமிழ்நாடு
சட்டப்பேரவை மற்றும் இந்திய பாராளுமன்றம் என இரண்டுக்கும் 1971ம் ஆண்டிலேயே தேர்தல்
நடைபெற்றது. எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் இணைந்திருந்த இந்த தேர்தலில் திமுக
அணியில் இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட், பார்வர்டு
பிளாக், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.
மூத்த தலைவர்கள் வெளியேறியதால் மத்திய ஆட்சியை தக்க
வைக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திரா காந்தி இருந்தார். எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு
தொகுதி பங்கீட்டை அவர் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் 9 பாராளுமன்ற தொகுதிகளை
மட்டும் திமுக அணியில் அவர் பெற்றார். இதுதான், திராவிட கட்சிகளின் தோளில்
காங்கிரஸ் கட்சி சவாரி செய்வதற்கு போடப்பட்ட முதல் பிள்ளையார் சுழி.
முந்தைய தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த ராஜாஜி, இந்த
தேர்தலில் திமுகவுக்கு எதிராக நின்றார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ்,
ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி இணைந்து தேர்தல் களத்தில் இறங்கின. இந்த தேர்தலில்
தான் பெருந்தலைவர் காமராஜரை மிகக் கடுமையாக திமுகவினர் விமர்சிக்க தொடங்கினர். தேர்தல்
களத்தில் தனி நபர் தாக்குதல் ஆரம்பமானது, இந்த தேர்தலில் தான் என்று கூறலாம்.
1971ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த தேர்தலில் திமுக
கூட்டணி 205 இடங்களை கைப்பற்றியது. திமுக மட்டும் தனியாக 184 தொகுதிகளை வென்றது.
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதற்கு முன்னும் சரி. அதற்கு பிறகும் சரி. இந்த அளவு
எண்ணிக்கையில் தனியொரு கட்சி இதுவரை வெற்றி பெற்றதில்லை. அந்த வகையில் இது ஒரு
வரலாற்று வெற்றி. தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி. நெடுஞ்செழியன்,
அன்பழகன், சி.பா.ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம் உட்பட 12 பேர் அமைச்சர்களாகினர்.
காமராஜரின் ஸ்தாபன காங்கிரசுக்கு 21 இடங்கள் மட்டுமே
கிடைத்தன. நாகர்கோவில் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு காமராஜர்
தேர்வானார். சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கருணாநிதி வெற்றி
பெற்றிருந்தார். அருகில் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் வென்றிருந்தார். இந்த மகத்தான வெற்றிக்கு பிறகுதான், இரு சகாப்தங்களுக்கு இடையே பிரிவு நேரிட்டது.
(நினைவுகள் சுழலும் ...)
No comments:
Post a Comment