Wednesday 9 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 14

= வை.ரவீந்திரன். 

1962ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காமராஜரின் ராஜினாமாவை தொடர்ந்து தமிழக முதல்வரான பக்தவத்சலம் ஆட்சியின் மோசமான நிர்வாகம், விலைவாசி உயர்வு, கடுமையான அரிசி பஞ்சம், மத்திய அரசின் இந்தி திணிப்பு, நேரு (1964), லால் பகதூர் சாஸ்திரி (1966) என இரண்டு பிரதமர்களின் அடுத்தடுத்த மறைவு, இந்திரா காந்தி பதவியேற்பு, காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்ற 1967ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல், தமிழக தேர்தல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது.



காமராஜர், பெரியார், பக்தவத்சலம், ராஜாஜி, சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி., அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என என்றென்றும் தமிழகத்தின் முகங்களாக திகழும் அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கெடுத்த தேர்தல் அது. சென்னை மாகாணம் என்ற பெயரில் நடைபெற்ற கடைசி சட்டப்பேரவை தேர்தலும் இதுதான். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டிருந்ததால் இரண்டு கட்சிகளாக கம்யூனிஸ்ட் களமிறங்கிய முதல் தேர்தல் இது. 


ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி, சி.பா. ஆதித்தனார் நாம் தமிழர் கட்சி, ம.பொ.சி.தலைமையிலான தமிழ் அரசு கழகம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்றவை திமுக கூட்டணியில் இடம் பெற்றன. அரிசி பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலத்தில், ‘ரூபாய்க்கு மூன்று படி லட்சியம். ஒரு படி நிச்சயம்’ என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. ஒரு படி என்பது சுமார் ஒன்றரை கிலோ.

எம்ஜிஆர், இந்த தேர்தலில் சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) தொகுதியில் போட்டியிட்டார். திமுகவுக்கு தேர்தல் நிதி திரட்டுவதிலும் கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதி வாரியாக நிதி திரட்டவும் மிகவும் உதவியாக எம்ஜிஆர் இருந்தார். ‘தம்பி... ராமச்சந்திரா.  உன் முகத்தை காட்டு ஒரு லட்சம் ஓட்டுகள் விழும்’ என பேரறிஞர் அண்ணா கூறிய வார்த்தைகளும் ‘வேட்டைக்காரன் வருவாண்ணேன். உங்கள வேட்டையாடிட்டு போயிருவாண்ணேன்...’ என்று பெருந்தலைவர் காமராஜர் கூறிய வார்த்தைகளுமே இதற்கு ஆதாரம்.  



கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றவது என போராட்ட களங்களில் கலைஞர் முன்னின்றார். ராஜாஜி, சி.பா.ஆதித்தனார், சிலம்பு செல்வர் மபொசி போன்ற தலைவர்களின் ஆதரவும் திமுகவுக்கு பக்கபலமாக இருந்தது. திமுகவுக்கு எதிராக சிவாஜி கணேசன், பத்மினி இருவரையும் பிரச்சார களத்தில் காங்கிரஸ் இறக்கியது.

திமுகவின் கைக்கெட்டும் தொலைவில் தமிழக அரியணை இருந்த நேரத்தில், திமுக தலைவரான அண்ணா சட்டப்பேரவைக்கு போட்டியிடாமல் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்பி பதவிக்கு போட்டியிட்டார்.

(நினைவுகள் சுழலும்)

No comments: