Monday 21 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 19



= வை.ரவீந்திரன்.

1971 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்குள் எந்த அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு 1971 தேர்தலுக்கு பிறகு திமுகவுக்குள் அதிரடி மாற்றங்களும் திருப்பங்களும் அரங்கேறின. அண்ணா மறைந்ததுமே, திமுகவுக்குள் பிரளயம் தொடங்கி விட்டது. ‘அழைக்கின்றார் அண்ணா’ என்பன போன்ற பாடல்கள் குறைந்து ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என பிரச்சார பாடல்கள் அதிக அளவில் திமுக பொதுக்கூட்டங்களில் ஒலிக்க தொடங்கின.


விளைவாக, மூத்த தலைவர்களான சத்தியவாணி முத்து, நெடுஞ்செழியன், க.ராசாராம் போன்றோர் கட்சியில் இருந்து வெளியேறினர். எனினும், 1972 அக்டோபர் 10ம் தேதி திமுக பொருளாளர் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட நிகழ்வு தான் திமுகவில் பேரதிர்வை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் பின்னால் அணிவகுத்த லட்சக்கணக்கான தொண்டர்களால் அக்.17ம் தேதி அதிமுக தோன்றியது. இரண்டு துண்டாக திமுக பிளவுபட்டது.  




சட்டப்பேரவையில் சபாநாயகர் மதியழகன், துணை சபாநாயகர் சீனிவாசன் இருவரும் ஒரே நேரத்தில் சபையை நடத்தியது, கருணாநிதி ஆட்சி மீது எம்ஜிஆர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் (1973) அதிமுக வெற்றி, எம்ஜிஆரின் அரசியல் எழுச்சி, தமிழக சட்டப்பேரவைக்குள் எம்ஜிஆருக்கு மைக் இணைப்பு கொடுக்காமல் அவமதித்தது என பல்வேறு சம்பவங்கள் அடுக்கடுக்காக தொடர்ந்தன. 



அப்போது, ‘இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என காமராஜர் கூறினார். இதற்கிடையே, 1975ம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுதும் நெருக்கடி நிலையை இந்திரா அமல்படுத்தினார். தமிழகத்தில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லை. ஏனென்றால், எமர்ஜென்சியின் தீவிர எதிர்ப்பாளரான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊழல் புகாரில் சிக்கிய திமுகவுடன் நெருக்கம் காட்டினார். அதனால், திமுகவுடன் இணைந்து எமர்ஜென்சியை எதிர்ப்பதில் காமராஜர் தயக்கம் காட்டினார். மேலும், எமர்ஜென்சி அறிவித்த 4 மாதங்களிலேயே அவர் மறைந்து விட்டார். 




இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எமர்ஜென்சிக்கு எதிராக திமுக தீவிர பிரச்சாரம் செய்தது. எனினும், இந்திரா காந்திக்கு அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன. ஊழல் குற்றச்சாட்டில் 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன் முதலாக ஆட்சி கலைப்பு வைபவம் அரங்கேறியது.

பின்னாளில், கருணாநிதி மீது அதிமுக அளித்த புகார்களின் அடிப்படையில் வீராணம் ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் பற்றி விசாரிக்க நீதிபதி சர்க்காரியா தலைமையில் கமிஷன் அமைத்ததும், எமர்ஜென்சி கொடுமைகளும், மதுரையில் 1977ம் ஆண்டு இந்திரா காந்தி தாக்கப்பட்டதும் தாக்குதலை பழ.நெடுமாறன் தடுத்ததும் தனிக்கதை.

(நினைவுகள் சுழலும்)

No comments: