Monday 7 March 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாறு ... 13

= வை.ரவீந்திரன். 


தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே 1861ம் ஆண்டு தொடங்கப்பட்ட சட்ட மேலவைக்கு 1986ம் ஆண்டில் ஆயுள் காலம் சுருங்க தொடங்கியது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை பரவலாக கூறுவது உண்டு.

அப்போது, மேலவை நியமன உறுப்பினர் பதவிக்கு நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா பெயரை அதிமுக அரசு பரிந்துரைத்தது. தனது கடனுக்காக, ஏற்கனவே அவர் மஞ்சள் நோட்டீஸ் (இன்சால்வென்சி) அளித்தவர் என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனே, நிர்மலாவின் கடனை அதிமுக நிதியில் இருந்து செட்டில் செய்ததோடு, ‘இன்சால்வென்சி’ நோட்டீஸை முதல் அமைச்சர் எம்ஜிஆர் திரும்ப பெற வைத்து நீதிமன்ற அனுமதியையும் பெற்றுத் தந்தார். ஆனால், சர்ச்சை கிளம்பியதால் எம்எல்சியாக நிர்மலா விரும்பவில்லை. 





இதற்கிடையே, வேட்பாளரை பற்றி சரியாக ஆராயாமல் பரிந்துரைத்தது குறித்து எம்ஜிஆரிடம் அப்போதைய ஆளுநர் குரானா கேட்டதால் சட்ட மேலவையை கலைத்து விட எம்ஜிஆர் தீர்மானித்தார் என்பது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மற்றொரு காரணம் என்ன தெரியுமா?

1957ம் ஆண்டு முதல் தோல்வியே இல்லாமல் எம்எல்ஏவாக வெற்றி பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி, 1984 சட்டப்பேரவை தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார் என்பது பலரும் அறியாத தகவல். முன்னதாக இலங்கை பிரச்சினைக்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கருணாநிதி, பின்னர் எம்எல்சி-யாகி இருந்தார். 

இந்த சூழ்நிலையில், தேர்தலின்போது அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். இதனால், 1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக + காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 



இதையடுத்து, இலங்கை பிரச்சினையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு வழியாக எம்எல்சியாக சட்டப்பேரவைக்குள் கருணாநிதி நுழைந்த கருணாநிதியின் பதவியை காலி செய்யவே சட்ட மேலவையை எம்ஜிஆர் கலைத்தார் என்ற மற்றொரு காரணத்தையும் அன்றைய அரசியல் அறிந்தவர்கள் கூறுவது உண்டு. 

“நான் இல்லாவிட்டால் இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்கும் என்றால் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி ஒழிந்தான். இனி கவலையில்லை. அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக்கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் எடுக்க முன்வரட்டும்" 

= மேலவை கலைப்பு தீர்மானத்தின் மீது மேலவையில் கருணாநிதி ஆற்றிய உரை இது.

ஆனால், சட்ட மேலவையால் அரசுக்கு தேவையில்லாமல் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அதை தவிர்க்கவே மேலவை கலைக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் காரணம் கூறப்பட்டது. மேலவை கலைப்புக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும் 1986ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று மேலவையை கலைக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை மற்றும் மேலவை என இரண்டு அவைகளும் நிறைவேற்றின. மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் சிலம்பு செல்வர் ம.பொ.சி.

அதற்கு, ஆகஸ்ட் 30ம் தேதி பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி, அதிகாரப்பூர்வமாக மேலவை கலைக்கப்பட்டது. பின்னர் 2006, 2010 என திமுக ஆட்சிக்கு வரும் சமயங்களில் மேலவையை உயிர்ப்பிக்க நடைபெறும் முயற்சிகள் அடுத்தடுத்த அதிமுக ஆட்சியால் தடைபடுகின்றன. தற்போது, உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகம், ஆந்திரா (தெலுங்கானா, ஆந்திரா), மகாராஷ்டிரா, காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

(நினைவுகள் சுழலும்)

No comments: