Saturday 8 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 10

எந்த வேஷம் கொடுத்தாலும் ஸ்கோர் பண்ணுபவரே சிறந்த நடிகர் என்றால் இவரே மகா நடிகர். தமிழை விட தெலுங்கில் இரு மடங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழுக்கு இவர் தந்த 50 பிளஸ் படங்கள் ஒவ்வொன்றும் தரமான நடிப்புக்கு கட்டியம் கூறுபவை. அவர்தான் எஸ்வி ரங்காராவ். ஆறடி உயரம், முன் வழுக்கை, கவுரவ தொப்பை என ஒரு நடுத்தர குடும்ப தலைவருக்கே உரித்தான தோற்றம். அதனால் தான் இவரது சினிமாவை பார்த்து முடித்ததும் ரங்காராவ் என்ற தந்தை கண்ணுக்குள்ளேயே நிறைந்திருப்பார்.



படிக்கும் போதும், அரசு பணியில் இருந்த போதும் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் தெலுங்கில் அறிமுகமாகி பின்னர் தமிழில் என்ட்ரி ஆனவர். இவரை முழுமையாக முதலில் அடையாளம் காட்டிய படம் "பாதாள பைரவி". நேபாள மந்திரவாதி வேடத்தில் வந்து பலே பிம்பலக்கா என அடிக்கடி கூறும் வசனம் ஹீரோவை தாண்டி இவர் மீது கவனத்தை திருப்பியது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் நாகிரெட்டி, சக்கரபாணி இருவருக்கும் இவர் மீது கரிசனம் உண்டு.


34 வயதிலேயே சாவித்திரியின் தந்தையாக வேஷம் போட ஆரம்பித்த ரங்கா ராவ், பணக்கார தந்தை, பாசமிகு தந்தை, ஏழைத் தந்தை, கவுரவமான பணக்கார தந்தை என பெரிய அளவில் அரிதாரத்தை மாற்றாமலேயே தனது நடிப்பால் பல விதமான தந்தை கேரக்டர்களை கண் முன்னே உலவ விட்டவர். மிஸ்ஸியம்மா படத்தில் கவுரவமான ஜமீன்தார், எங்க வீட்டு பிள்ளை, சபாஷ் மீனாவில் நகைச்சுவையுடன் கூடிய ஜமீன் தந்தை, கற்பகம் படத்தில் ஜெமினியின் பாசமான மாமனார், கருப்பு நிறத்துடன் அவலங்களை எதிர் நோக்கும் விஜயகுமாரிக்கு பாசமிகு மாமனாராக நானும் ஒரு பெண் படம் என ரங்காராவை தவிர வேறு எவரையும் தந்தையாக தமிழ் சினிமாவில் நினைத்துப் பார்க்கவே முடியாது.  கேரக்டர்களில் அப்படியே வாழ்ந்திருப்பார் மனுஷன்.



அலட்டல் இல்லாத ஜமீன்தாராகவும், செல்வந்தராகவும் தோன்றிய அவர், பெரும் பணக்காரர்கள் இரவு நேரத்தில் வீட்டில் அணியும் ஹவுஸ் கோட் என்ற ஆடைக்கே அடையாளம் தந்தவர். சிவாஜி கணேசனுடன் படிக்காத மேதை படத்தில் மிகப்பெரும் தனவந்தராக தோன்றி பெர்க்லே சிகரெட்டை புகைக்கும் ஸ்டைலே தனி. (அந்த கால விலை உயர்ந்த சிகரெட் அது. ரங்காராவுக்கு பிடித்தமானது. அதன் விளம்பர நடிகராகவும் இருநதிருக்கிறார்) அந்த படத்திலேயே அனைத்தையும் இழந்து துயரத்தின் விளிம்பில் நிற்கும் தந்தையாக நடித்திருப்பாரே, இரண்டும் வேறு விதம். "எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..." என்ற பாடலில் சிவாஜிக்கும் ரங்காராவுக்கும் இடையே நடிப்பில் பெரிய போட்டியையே பார்க்க முடியும்.


தந்தை வேடத்துக்கு மட்டுமே ஆனவர் அல்ல அவர். புராண கால கதாபாத்திரங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவரும் அவரே. கம்சன், இரணியன், ராவணன் (சோபன்பாபு நடித்த ராமாயணம்) கடோத்கஜன், யமன், கீசகன், நரகாசுரன், துரியோதன், அரிச்சந்திரன், அக்பர் (அனார்கலி படம்), மகேந்திர வர்ம பல்லவர் (பார்த்திபன் கனவு) இப்படி ஏராளமான  கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நினைக்க வைத்தவர். பிளாக் மேஜிக் மந்திரவாதிகளுக்கான பிம்பத்தை காண்பித்தவரும் ரங்கா ராவ் தான்.



இன்றளவும் சினிமா ரசிகர்கள் முணுமுணுக்கும் "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், அந்த கவுரவர் பிரசாதம், இதுவே எனக்கு போதும்... " என்ற பாடலில் பீமனின் ராட்சத புதல்வன் கடோத்கஜனாக தோன்றி கல்யாண விருந்தை ஒற்றை ஆளாக சாப்பிட்டு அதகளம் பண்ணும் ரங்காராவின் நடிப்பு மறக்க முடியாதது. அந்த படத்தில் தர்மர், அர்சுனன், சகுனி, துரியோதனன், அபிமன்யு வேடங்களில் என்டிஆர், நாகேஸ்வர ராவ், நம்பியார், ஜெமினி, சாவித்திரி, தங்கவேலு என பெரிய பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தாலும் மாயாபஜார் என்றால் ரங்காராவ் தான்.


எந்தவொரு வேடத்தையும் அநாயாசமாக தூக்கிப்போட்டு செல்லும் ரங்காராவின் கம்பீரமான வசன உச்சரிப்பிலேயே ஒரு மரியாதை ரசிகர்களுக்குள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஒரே விதமான வேடமாகவே இருந்தாலும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் வல்லவர் அவர். தேவதாஸ் படத்தில் மகனின் காதலை பிரிக்கும் ஜமீன்தாராகவும், பக்த பிரகலாதாவில் இரண்ய கசிபுவாகவும் எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் கொடூரமான அரசியல்வாதியாகவும், சிவாஜியின் ராஜா படத்தில் போதையில் நாயகியின் ஆடையை அவிழ்க்கும் காம வெறியனாகவும் வில்லன் நடிப்பிலும் வெரைட்டி காட்டியவர், ரங்காராவ்.


கண்கண்ட தெய்வம், அன்பு சகோதரர்கள் படங்களில் அண்ணன் தம்பி பாசத்துக்கு உதாரணமாக வாழ்ந்தவர். அடிப்படையில் தெலுங்கு நடிகர் என்பதால் அவரது வேட்டி கட்டும் பாங்கும் அப்படியே இருக்கும். அதையே சினிமாவில் தந்தைக்கான அடையாளமாக மாற்றியவர், எஸ்.வி.ரங்காராவ்.



நடிப்பு சலிக்கும்போது ஓய்வெடுக்க செல்லும் நடிகர்களுக்கு இவரே முன்னோடி. ஆந்திராவில் தனது வீட்டின் அடியில் பாதாள அறை ஒன்றை கட்டியிருந்த அவர், அதில் ஆறு மாதம் வரையிலும் கூட ஓய்வெடுத்தது உண்டாம். 



அண்ணன், தம்பி பாசம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வரும் "முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக, அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக..." பாடல் இடம் பெற்ற அன்பு சகோதரர்கள் (1974) தான் தமிழில் அவரது கடைசி படம். 

கல்லூரி முடித்த காலங்களில், காக்கிநாடா நாடக குழுவில் சேர்ந்து சீஸர், ஷைலாக் வேடங்களில் எல்லாம் நடித்து விட்டு கடைசி வரை ஷேக்ஸ்பியராக  நடிக்காமல் போனது அவரது நிறைவேறாத ஆசை. 20 வயதிலேயே நாடகங்களில் 60 வயது முதியவர் வேடங்களில் நடித்திருக்கிறார்.



கால் நூற்றாண்டு கால தனது சினிமா வாழ்க்கையில் தந்தை, ஜமீன்தார், மிகப் பெரிய மனிதர் என நடித்த ரங்காராவ், அந்த வேடங்களில் மட்டும் தான் முதுமையில் வாழ்ந்திருக்கிறார். நிஜ வாழ்வில் முதுமையை அடையும் முன் 55 வயதிலேயே இறந்து விட்டார்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

1 comment:

Anonymous said...

அருமையான அரிய தகவல்கள். வீட்டு பாதாள அறையில் நீண்டநாள் ஓய்வு எடுப்பார் என்பது வியப்பான செய்தி.👏👏👌👌