Wednesday 19 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 14

 வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்து நகைச்சுவை கலந்த குணசித்திரத்தால் நிலைத்திருக்கும் டிஎஸ் பாலையா, பொக்கிஷத்தில் மின்னும் இன்றைய பவளம்.


நடிப்பின் மீதான ஆசையால் கந்தசாமி முதலியார் நாடக குழுவில் சேர்ந்து அவர் மூலமாகவே சினிமாவில் நுழைந்தவர் டிஎஸ் பாலையா. அவரது முதல் படம் சதி லீலாவதி (1936). அந்த படத்தின் கதாசிரியர் கந்தசாமி முதலியாரின் மகனான படத்தின் நாயகன் எம்.கே.ராதா தொடங்கி என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., தங்கவேலு என பின்னாளைய பிரபலங்கள் அனைவருக்குமே அந்த படம் தான் முகவரி.


முதல் படத்திலேயே வில்லனாக தோன்றிய டி.எஸ்.பாலையா, தியாகராஜ பாகவதரின் அம்பிகாபதி (1937), பி.யூ. சின்னப்பா நடித்த ஆர்யமாலா (1941) என அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் நடிகரானார். இடையே, மாடர்ன் தியேட்டர்ஸின் 'சித்ரா' மற்றும் எம்ஜிஆரும் ஜானகியம்மாளும் நடித்த மோகினி (1948) படத்தில் அன்றைய பிரபல ஹீரோயின் மாதுரி தேவியுடனும் 'ப்ரசன்னம்' என்ற மலையாள படத்தில் அறிமுக நாயகியான நாட்டிய பேரொளி பத்மினியுடனும் ஹீரோவாக நடித்திருக்கிறார் பாலையா. 


ஆனாலும் வில்லன் நடிப்பில் ஜொலித்தார். வேலைக்காரி, அந்தமான் காதலி, ராஜகுமாரி, மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம், தாரம், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், தூக்குத் தூக்கி என அவர் வில்லனாக மிரட்டிய படங்கள் ஏராளம். 'வேலைக்காரி'யில் அண்ணா வசனத்தில் பகுத்தறிவு பேசுவதோடு குடியை கெடுக்கும் நான்கு வித தந்திரங்களை அவர் விவரிக்கும் விதம் அபாரம்.



எம்ஜிஆரின் 'அந்தமான் காதலி'யில் காமுக வில்லனுக்கு தூபமிடும் வஞ்சகனாகவும் மதுரை வீரனில் வெட்டிப் பந்தாவுடன் உதார் விடும் தளபதியாகவும், சிவாஜியின் தூக்குத் தூக்கி படத்தில் வட இந்திய சேட் போலவும் டிஎஸ் பாலையா நடித்த கதாபாத்திரங்கள் எல்லாம் சின்ன சின்ன உதாரணங்கள் தான். மதுரை வீரனில் பொம்மியை ஆற்றில்  காப்பாற்றியது போல ஆடையில் தண்ணீரை பிழிந்து ஏமாற்றுவதும் சண்டை வரும்போது வெள்ளிக்கிழமை கத்தியை கையால் தொட மாட்டேன் என பேசுவதும் அவரது நகைச்சுவை கலந்த வில்லத்தனத்துக்கு சான்று.


புதுமைப்பித்தன் (1957) படத்தில் நய வஞ்சக வில்லன் வேடம். அதற்கு பொருத்தமாக "வஞ்சகத்தின் மொத்த உருவமே நடந்து வருகிறது பாருங்கள்" என்ற வசனத்தை அந்த படத்தில் எம்.ஜி.ஆர் பேசுவார். 'மணமகள்' படத்தில் பாலையாவின் நடிப்பை பார்த்து அந்த காலத்திலேயே கார் பரிசாக கொடுத்திருக்கிறார் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன். சினிமா உலகில் கார் பரிசளிக்கும் வழக்கம் பாலையாவால் தான் ஆரம்பித்திருக்கிறது.



உச்சத்தில் இருந்தபோதே, சினிமாவும் வாழ்க்கையும் போரடித்து தலைமறைவான டிஎஸ் பாலையாைவை புதுச்சேரியில் அடையாளம் கண்டு மீண்டும் அழைத்து வந்து நடிக்க வைத்தவர், மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவன அதிபர் சுந்தரம். உடனடியாக அவர் எடுத்த 'பர்மா ராணி' படத்திலும் உளவாளியாக வில்லத்தனத்தை நிரூபித்திருப்பார் பாலையா. இவை எல்லாம் டிஎஸ் பாலையா பற்றி ரசிகர்கள் அதிகம் அறிந்திராத பக்கங்கள்.


அதன் பிறகு குணச்சித்திர நடிப்பில் தந்தையாக,  குடும்பத் தலைவராக பெரிய மனிதராக நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டினார், பாலையா. கவலை இல்லா மனிதன், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், பாகப் பிரிவினை, பாலும் பழமும், ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் என டிஎஸ் பாலையா என்றதுமே நினைவில் வரும் படங்களின் பட்டியல் ஏராளம்.


எம்ஜிஆருடன் பணம் படைத்தவன், பெற்றால்தான் பிள்ளையா, சிவாஜியுடன் பாகப் பிரிவினை, பாலும் பழமும் மாதிரியான படங்கள் எல்லாம் உருக்கமான உணர்ச்சி வசமாகும் தந்தை என்றால் காதலிக்க நேரமில்லை, சிவாஜியின் தந்தையாக ஊட்டி வரை உறவு, பாமா விஜயம் வகையறா எல்லாம் நகைச்சுவை மிகுந்த உற்சாக தந்தை.


அதுவும் காதலிக்க நேரமில்லை படம் என்றாலே நாகேஷை விட பாலையாதான் முதலில் நினைவுக்கு வருவார். அவரிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் 'என்னது ஒரு பொண்ணு உள்ள கண்ணா.. கேட்கவே பயங்கரமா இருக்கே..' என கூறுவதும் பணக்கார பையன் கப்பல் அதிபர் என கூறியதும் 'ஏனுங்க அசோகரு உங்க மகருங்களா...?' என அதிகபட்ச மரியாதையுடன் பேசுவதும் பாலையாவின்  நகைச்சுவை நடிப்பின் உச்சம். படங்களில் அவரது வசன உச்சரிப்பு, முக பாவம், உடல் மொழி அனைத்தும் ஆஸம் ரகம்.



சிவாஜியுடன் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் தவில் வித்வானாக அவர் அடிக்கும் லூட்டி, தலைமுறைகளை கடந்தும் கொண்டாடப் படுகிறது. நாகேஷ், மனோரமா இருந்தும் கூட 'தில்லானா மோகனம்பாள்' என்றாலே பாலையாதான். "இவங்கல்லாம் ஸீன்ல இருந்தா உஷாரா இருக்கணும் இல்லைன்னா நம்மள பின்னுக்கு தள்ளிருவாங்க" இப்படி சிவாஜி கணேசன் சொன்ன மூன்று பேரில் ஒருவர் பாலையா. மற்ற இருவர் எம்ஆர் ராதா, ரங்காராவ்.


அதனால் தான் இயக்குநர் ஏபி நாகராஜனின் ஆஸ்தான நடிகராக பாலையா இருந்தார். 'திருவிளையாடல்' படத்தில் இசை கர்வம் கொண்ட, பாண்டிய நாட்டையே அடிமையாக்க துடிக்கும் ஹேமநாத பாகவதராகவே வாழ்ந்திருப்பார், பாலையா. அதில், பாலையாவுக்காக "ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா..." பாடலை பாடிய பாலமுரளி கிருஷ்ணாவே அந்த வேஷத்தில் நடிக்க விரும்பியபோது, "நீங்கள் இசையில் மேதை, ஆனால் நடிப்பில் பாலையாதான் மேதை" என கூறி விட்டாராம் இயக்குநர் ஏபி நாகராஜன். அதன் பிறகு குரலாகவும் உருவமாகவும் ஹேமநாத பாகவதர் கேரக்டருக்கு  பாலமுரளியும் பாலையாவும் உயிர் கொடுத்திருக்கின்றனர்.



ஏபி நாகராஜனின் 'அகத்தியர்' (1972) படம்தான் பாலையாவின் கடைசி படம். 35 ஆண்டு கால சினிமா பயணத்தில் பெரும்பாலான படங்களில் நடுத்தர, முதிய வயது வேடங்களில் நடித்த இவரும் ரங்காராவ் போலவே முதுமையை காணாமலேயே இறந்து விட்டார். நெல்லை மண்ணில் பிறந்த டிஎஸ் பாலையா மறையும் போது 57 வயதுதான்.

பாலையாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன், அவரைப் பற்றி 1940களிலேயே  கூறிய வார்த்தைகள் "பாலையாவை மிஞ்ச யாராலும் முடியாது. எந்த ரோல் குடுத்தாலும் அசத்துறான்". இதை 1972 வரை நிரூபித்தவர் டிஎஸ் பாலையா.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: