Monday 31 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 17

நூறாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் முதல் தலைமுறை கதாநாயகிகள் பலர் இருந்தாலும் இவர்தான் உண்மையான கதாநாயகி. முதல் கனவு கன்னி, லேடி சூப்பர் ஸ்டார், கருப்பாக இருந்தாலும் கவர்ச்சி கட்டழகி என எல்லாவித பட்டங்களையும் 1940களிலே பெற்றவர். அவர்தான் டி.ஆர்.ராஜகுமாரி. ராஜாயியாக அறிமுகமாகி, ராஜலட்சுமியாகி, பின்னர் ராஜகுமாரியானவர். அந்த வகையில் சினிமாவில் நடிகைகளின் பெயர் மாற்றும் டிரெண்டை ஆரம்பித்தவரும் இவரே. 



1939ல் அறிமுகமான இவருக்கு பெயர் வாங்கித் தந்தது கச்ச தேவயானி (1941). தமிழ் சினிமாவின் முதல் தலைமுறை சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.ஆர்.ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் அடுத்த தலைமுறையில் எம்ஜிஆர், சிவாஜியுடனும் ஜோடியாக நடித்தவர். இவரது பொருத்தமான ஜோடி பி.யூ.சின்னப்பா என்பது அன்றைய ரசிகர்களின் கணக்கு. நடிப்பு, நடனம், பாடகி, தயாரிப்பாளர் என பலமுகம் கொண்டவர், டி.ஆர்.ராஜகுமாரி.


பாகவதருடன் நடித்த  சிவகவி, ஹரிதாஸ், அமரகவி படங்கள் அக்கால சூப்பர் டூப்பர் ஹிட். ஹரிதாஸ் (1944) படத்தில் தாசிப் பெண் ரம்பா வேடத்தில் இவர் காட்டிய நளினமும் கவர்ச்சியும் (தமிழின் முதல் கவர்ச்சி நாயகி இவர்தான்) தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக்கியது. இன்றளவும் ரசிகர்கள் முணுமுணுக்கும் "மன்மத லீலையை வென்றார் உண்டோ...என் மேல் உனக்கு பாரா முகம் ஏனோ..." என்ற பாடலை இவரைப் பார்த்துதான் பாகவதர் பாடுவார். இந்த பாடலின் நடுவே இவர் தரும் ஃபிளையிங் கிஸ், அன்றைய காலகட்டத்தில்  பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்.



தமிழ் சினிமாவின் நிரந்தர புகழ்பெற்ற சினிமாக்களில் ஒன்றும் அக்காலத்திலேயே மிகப் பெரும் செலவில் எடுக்கப்பட்ட படமுமான ஆனந்த விகடன் முதலாளி எஸ்எஸ் வாசன் தயாரித்த சந்திரலேகா (1948) படத்தின் நாயகி இவர்தான். இதில் சர்க்கஸில் பார் விளையாடும் பெண்ணாக நடித்த டிஆர் ராஜகுமாரியின் ஜிப்ஸி நடனம் ரசிகர்களை கட்டிப் போட்டது. படத்தின் கிளைமாக்சில் பிரம்ண்ட முரசுகள் மீது ராஜகுமாரியும் நடன பெண்களும் ஆடும் நடனம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் பிரமாண்டம்.



நாயகியாக எம்ஜிஆருக்கு இவர் சீனியர். ஆனால், எம்ஜிஆருடன் பணக்காரி படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். குலேபகாவலி படத்தின் நாயகிகளில் ஒருவர். பகடை ஆட்டத்தில் ஏமாற்றி ஒவ்வொருவராக வீழ்த்தி அடிமையாக்கும் கேரக்டர். இதில், ராஜகுமாரி பாடும் "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே பாடல்..." பிரபலமானது. பெண்களே ஆளும் அல்லி ராஜ்ஜியமான பகாவலி நாடு, குலேப் பூ என ரசிகர்களை கவர்ந்த சூப்பர் ஹிட் படம் இது. இந்த படத்தின் "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..." பாடல் இன்றும் சுண்டி இழுக்கும் ரகம்.



அந்தக் கால நயன்தாரா என்றே சொல்லும் அளவுக்கு நாயகியாக கலக்கிய ராஜகுமாரி, வில்லி வேடத்தையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான மனோகரா படத்தில் "வசந்த சேனை... வட்டமிடும் கழுகு... வாய் பிளந்து நிற்கும் ஓநாய்..." என சிவாஜி கணேசன் கனல் கக்கும் வசனங்களை பேசுவது இவரைத்தான். ஆம். மனோகரா படத்தின் வசந்த சேனை, டிஆர் ராஜகுமாரியே.


தனது தம்பியும் இயக்குநருமான டிஆர் ராமண்ணாவுடன் சேர்ந்து படங்களையும் தயாரித்திருக்கிறார், ராஜகுமாரி. சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக் கிளி, இவர்களது தயாரிப்புதான். 


பாசம், குலேபகாவலி, பணம் படைத்தவன், பறக்கும் பாவை, பெரிய இடத்துப் பெண் என பல படங்களை தம்பியுடன் சேர்ந்து தயாரித்த இவர், குணச் சித்திர வேடங்களுக்கும் மாறினார். எம்ஜிஆருக்கு தாயாக (பாசம்), அக்காளாக (1963ல் வெளியான பெரிய இடத்துப் பெண்) நடித்த ராஜகுமாரி தனது 43 வயதில் நடிப்பை நிறுத்திக் கொண்டார். 1963ல் வெளியான அவரது கடைசி படமான 'வானம்பாடி'யில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார், கமல்ஹாசன்.


ராஜகுமாரி நடித்த சுமார் 35 படங்களில் 25 ஹீரோயின். 100க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடி இருக்கிறார், டிஆர் ராஜகுமாரி. புதுமைப்பித்தன் படத்தில் டிஎஸ் பாலையாவுடன் "மோகனா, மன மோகனா..." என 1955 வரை 15 ஆண்டு காலம் கனவு கன்னியாக ஜொலித்தவர். 


முதன் முதலில் சொந்தமாக தியேட்டர் கட்டிய நடிகையும் இவர்தான். சென்னை பாண்டி பஜாரில் இவர் கட்டிய 'ராஜகுமாரி தியேட்டர்'தான், முதலாவது ஏசி தியேட்டர். சென்னையில் முக்கிய லேண்ட் மார்க்காக, 20 வருஷத்துக்கு முன்பு வரையிலும் கூட இருந்த அந்த தியேட்டர், வணிக வளாகமாகி விட்டது.

தனது தம்பிகளின்  குடும்பத்துக்காகவே திருமணம் முடிக்காமல் கடைசி வரை வாழ்ந்த டிஆர் ராஜகுமாரியை பற்றி கண்ணதாசன் சொன்ன வார்த்தைகள்: மறு பிறவி என இருந்தால் டிஆர் ராஜகுமாரியின் தம்பியாக பிறக்கணும்...

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: