Friday 28 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 16

தமிழ் சினிமாவில் சின்னவர் என்றால் எம்ஜிஆர் ஒருவரைத்தான் குறிக்கும். அதற்கு காரணம் இவர் தான். இவரை பெரியவர் என அழைத்ததாலேயே தானாகவே எம்ஜிஆர் சின்னவர் ஆனார். அவர்தான் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. நாடகங்கள் நடித்த காலத்தில் இருந்து இறக்கும் வரை தம்பிக்கு சினிமாவிலும் அரசியலிலும்  பக்கபலமாக இருந்தவர். அதனாலேயே தனது வாய்ப்புகளை சுருக்கிக் கொண்டாலும் சிறந்த நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். 



எம்ஜிஆரின் இரண்டாவது படமான "இரு சகோதரர்கள்" (1937) இவரது அறிமுகம். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக குழுவில் இருந்து நடிக்க வந்த சக்கரபாணியின் ஒரிஜினல் பெயர் நீலகண்டன். அடுத்தடுத்த படங்களில் வில்லனாக மிரட்டியவர், சக்கரபாணி. மாயா மச்சிந்திரா, மகமாயா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, அபிமன்யூ, ஸ்ரீமுருகன்,  பொன்முடி, திகம்பர சாமியார், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, இதயகீதம், குடும்ப விளக்கு, பிரேமபாசம் என வில்லன் மற்றும் குண சித்திர நடிப்பில் ஜொலித்தவர். மகமாயா படத்தில் காமுக அரசனின் நெருங்கிய மந்திரியாக இவர் பேசும் வசனங்கள் தான், தமிழ் சினிமாவின் முதல் நக்கல் வசனங்கள். 



தம்பி எம்ஜிஆருடனும் பல படங்களில் நடித்திருக்கும் சக்கரபாணி, கணீர் குரலுக்கு சொந்தக்காரர். மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், என் தங்கை, என் மகள், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், நாளை நமதே, நேற்று இன்று நாளை, இதய வீணை வரை நடித்திருக்கிறார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பேராசை பிடித்த காசிம்கானாக நடித்திருந்தார். குகைக்குள் சென்று பொக்கிஷத்தை அள்ளி விட்டு, சந்தோஷத்தால் மந்திரத்தை மறந்து "கதவே திறந்திடு, சக்கரமே திறந்திடு" என கூறி கடைசியில் 40 திருடர்களிடம் சிக்கி கொலையாகி உயிரிழக்கும் கேரக்டர் இவர்தான்.



மன்னாதி மன்னன் படத்தில் கரிகால் மன்னனாக எம்ஜிஆரின் மாமனாராக நடித்திருப்பார். தம்பி தயாரித்து இயக்கிய தமிழின் முதலாவது பரீட்சார்த்த முறை வண்ணப்படமான நாடோடி மன்னனில் வில்லன் குழுவில் முக்கிய நபர் சக்கரபாணி. வழுக்கை தலையை தடவியபடி மற்றொரு கையில் கம்பு ஊன்றி வீரப்பா மற்றும் நம்பியாருடன் சேர்ந்து மன்னனுக்கு எதிராக சதி வலை பின்னும் கார்மேகம் கதாபாத்திரத்தை இன்றும் ரசிக்கலாம்.



60 ஆண்டுகளுக்கு பின்னும் காலத்தை கடந்து பேசப்படும் இந்த படத்தை 'எம்ஜியார் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரித்தபோது, தம்பிக்கு முழு பலமாக இருந்தவர் சக்கரபாணி. பணம் முழுவதையும் இந்த படத்தில் போட்டு விட்டு நின்றதை பார்த்து இவர் கேட்ட கேள்விக்கு  எம்ஜிஆர் சொன்ன பதில். "இந்த படம் ஓடினால் மன்னன். இல்லாவிட்டால் நாடோடி". ஆனால், படம் பெரு வெற்றி.

அதன்பிறகு, சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் வேகமான வளர்ச்சியால் அவருக்கு உதவுவதற்காக, தனது பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு  மேனேஜர் போலவே மாறிக் கொண்டார். ஆனாலும் அவ்வப்போது எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட சினிமாக்களில்  தலை காட்டியதோடு பட தயாரிப்பிலும் ஈடுபட்டார்.



ஜெயலலிதாவும் சரோஜாதேவியும் சேர்ந்து நடித்த ஒரே படமான "அரச கட்டளை"யின் இயக்குநர் எம்.ஜி.சக்கரபாணி தான். படத்தை தயாரித்தவரும் இவரே. நாடோடி மன்னனில் தம்பியின் இயக்கத்தில் நடித்தவர், இதில் தம்பியை இயக்கினார்.

நாடக வாழ்க்கையில் இருந்தே தம்பிக்கு முழு பலமாக இருந்த சக்கரபாணி, சினிமாவிலும் ஜாம்பவான் தான். ஆனால் தம்பிக்காக வாய்ப்புகளை துறந்த அவர், முதல்வரான பிறகும் கூட தம்பியிடம் எந்தவித ஆதாயமும் பார்க்காதவர். எம்ஜிஆர் மறைவுக்கு முந்தைய ஆண்டுதான் (1986) சக்கரபாணி மறைந்தார். எம்ஜிஆருக்கு 1980களில் சிறுநீரக தானம் செய்தது, இவரது மகள் லீலாவதி தான். 

பொதுவாக, 'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என சொல்வார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் சகோதரர்கள் விஷயத்தில் "அண்ணன் உடையான்..." என்றே சொல்லலாம்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: