தமிழ் சினிமாவில் ரத்த உறவுகள் அடுத்தடுத்து நுழைவது, காலம் காலமாக தொடரும் வழக்கம். அதில் முன்னோடியாக திருவிதாங்கூர் சகோதரிகளை சொல்லலாம். இன்றைய கேரளா, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த அந்த அக்காள், தங்கைகள் பரத நாட்டியத்தில் மிகச் சிறந்தவர்கள். தமிழ் சினிமாவின் ஆரம்ப நாட்களில் நடனம் என்றால் இவர்கள் தான். அதுவும் அரசர்கள் கதைகளாக படங்களாகவே பெரும்பாலும் எடுக்கப் பட்டதால் தவிர்க்க முடியாதவர்களாகவே இருந்தார்கள்.
இந்த மூன்று சகோதரிகளில் ஒருவரை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். அவர்தான் நாட்டிய பேரொளி பத்மினி. மற்ற இருவர், பத்மினியின் அக்காள் லலிதா, தங்கை ராகிணி. சினிமாவில் இவர்களின் குரு அன்றைய நடன இயக்குநர் வழுவூர் ராமையா பிள்ளை.
மூத்தவரான லலிதா, 1947ல் இருந்து சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நடனம், நடிப்பு என நீடித்திருக்கிறார். டிஎஸ் பாலையாவும் எம்ஜிஆரும் நடித்த மோகினி, மதுரை வீரன், மந்திரி குமாரி, எவிஎம்மின் வேதாள உலகம், எம்ஜிஆரும் அவரது மனைவி ஜானகியும் இணைந்து நடித்த மருதநாட்டு இளவரசி, பாக்தாத் திருடன் என லலிதாவின் படங்கள் தமிழில் ஏராளம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் இவரது பங்கு உண்டு.
இதுபோல ராகிணியின் பங்களிப்பும் 1975 வரை தமிழ் சினிமாவில் இருந்தது. இவர் பெங்காளி, சிங்கள மொழி சினிமாக்களிலும் நடனமாடி இருக்கிறார், நடித்திருக்கிறார். ராகிணியின் படங்களில் சிவாஜி கணேசனின் உத்தம புத்திரன், வீரபாண்டிய கட்ட பொம்மன், எம்ஜிஆரின் படங்களான மதுரை வீரன், மன்னாதி மன்னன், சக்கரவர்த்தி திருமகள், ராணி சம்யுக்தா, பரிசு, ஜெயலலிதா நடித்த ராமன் தேடிய சீதை போன்ற படங்கள் பிரபலமானவை.
நடனத்துக்காக மட்டுமே நடன காட்சிகளில் மட்டுமே பத்மினி சகோதரிகள் தோன்றினாலும் பல படங்களில் கதாபாத்திரங்களிலும் பத்மினியின் சகோதரிகள் நடித்திருக்கிறார்கள்.
சிவாஜி நடித்த, டிஎம் சவுந்தரராஜனுக்கு புகழை பெற்றுத் தந்த தூக்கு தூக்கி படத்தில் மூன்று சகோதரிகளுமே முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இதுபோல மதுரை வீரன், மந்திரி குமாரி, வனசுந்தரி படங்களிலும் லலிதா, பத்மினி, ராகிணி சகோதரிகளின் பங்கு உண்டு.
பிரபல நடிகையாகி விட்ட பத்மினியை ரசிகர்கள் அறிந்த அளவுக்கு அவரது இரண்டு சகோதரிகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் நடனம் நடிப்பு லலிதா, ராகிணியின் பங்கு தமிழ் சினிமாவில் அதிகம்.
லலிதா, பத்மினி, ராகிணி என்ற திருவிதாங்கூர் நடன சகோதரிகளின் உறவினர்கள் தான் 1990 களில் முன்னணி நடிகையான 'இது நம்ம ஆளு' ஷோபனா, "காதல்தேசம், ஆவாரம் பூ, சந்திரமுகி"வினீத் மற்றும் 'பூவே உனக்காக' உள்பட பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்த சுகுமாரி என்பது கூடுதல் தகவல்
(பவளங்கள் ஜொலிக்கும்...)
#நெல்லை_ரவீந்திரன்
No comments:
Post a Comment