Sunday 23 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 15

எந்த வித ஒலியுமில்லா ஊமைப்படமாக தொடங்கி, ஒரே படத்தில் இரண்டு மூன்று மொழிகள் பேசுவதாக ஆரம்பித்து தூய தமிழ் வசனங்களாக தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் சினிமா காரர்களுக்கு சமூகத்தில் அவ்வளவாக மரியாதை கிடையாது. நாடக கலைஞர்களே சினிமாவில் நுழைந்த கால கட்டத்தில் கூத்தாடிகள் என்றே விமர்சிக்கப்பட்டனர். மக்களிடம் சினிமா மோகம் இருந்தாலும் இதுதான் நிலைமை.

ஆனால், சினிமா என்பது அனைத்தையும் மாற்ற வல்லது. நொந்து கிடக்கும் மனித உள்ளங்களை கிளர்ச்சியுற செய்வது. அது ஒரு பணம் காய்ச்சி மரம். இது மாதிரியான ரகசியங்களை அறிந்தவர்கள் சிலரே. அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து பத்துக்கும் அதிகமான ஹிட் படங்களை அமெரிக்கர் ஒருவர் கொடுத்திருக்கிறார். அவர் தான் எல்லிஸ் ஆர்.டங்கன். முந்தைய பதிவில் டிஎஸ் பாலையா பற்றி எழுதியதும் சிலர் இவரைப்பற்றி கேட்டதால், இவரையும் அறிமுகம் செய்யலாமே என்ற எண்ணம் எழுந்தது.



அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை கழகத்தில் சினிமாத் துறையில்  படிப்பை முடித்து தனது நண்பர்கள் மைக்கேல், மாணிக் லால் தாண்டனுடன் சினிமா கனவுகளுடன் 1935ல் இந்தியாவுக்கு வந்தவர் எல்லிஸ் ஆர்.டங்கன். தாண்டன் இயக்கிய 'நந்தனார்' படத்தில்தான் முதலில் பணியாற்றி இருக்கிறார். தமிழ் சினிமாவின் அரிய பொக்கிஷ படங்கள் சிலவற்றுக்கு, அதன் டைட்டிலைத் தவிர ஆதார ஆவணமாக எந்த வகை பிரிண்டும் தற்போது கிடையாது. அதில், நந்தனார் படமும் ஒன்று.

கேபி சுந்தராம்பாள் நடித்த அந்த படத்தில் முழு வேலையையும் இழுத்துப் போட்டு செய்த டங்கனை நம்பி தயாரிப்பாளர் மருதாசலம் செட்டியார் கொடுத்த படம் தான் "சதிலீலாவதி". இந்த படத்தின் மூலமாக, ஒரு டிரெண்ட் செட்டர் இயக்குநர் என்பதை நிரூபித்தார் எல்லிஸ் ஆர்.டங்கன். 1940களில் பிரபல ஹீரோவாக உயர்ந்த எம்கே ராதா. 1950 தொடங்கி, 1960, 1970கள் வரை கோலோச்சிய எம்ஜிஆர், நகைச்சுவை மன்னர்கள் என்எஸ்கே, தங்கவேலு, டிஎஸ் பாலையா என அனைவருக்குமே இந்த படத்தில் அறிமுகம் தந்தவர்.



அதன் பிறகு, எம்கே தியாகராஜ பாகவதர் நடித்த  அம்பிகாபதி (அந்த காலத்திலேயே ஒரு ஆண்டு காலம் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்த படம்)

எம்எஸ் சுப்புலட்சுமி (பிரபல கர்நாடக இசை மேதை எம்எஸ் சுப்புலட்சுமி, நடிப்பவரே பாட வேண்டிய, பின்னணி குரல் அறிமுகமாகாத 1940களில் பிரபல நாயகியாக இருந்தார்) நடித்த மீரா மற்றும் சகுந்தலை,



இரு சகோதரர்கள் (இது எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம்), காளமேகம்,  பொன்முடி, மந்திரி குமாரி என 1950 வரை இயக்கி இருக்கிறார், எல்லிஸ் ஆர். டங்கன்.

தமிழ் சினிமாவில் மேக் அப்பில் மாற்றத்தை கொண்டு வந்தவர். படப்பிடிப்பில் நகரும் கேமராக்களை பயன் படுத்தும் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தவர். அன்றைய கால சினிமாவில் இருந்து மாறுபட்டு நெருக்கமான காதல் காட்சிகளை படமாக்கியவர். இன்றைய 'மேக்கிங் ஆப் பிலிம்' என்ற டிரெண்டை 1936லேயே தனது முதல் படமான 'சதிலீலாவதி'யில் ஆரம்பித்து வைத்தவர். இப்படி இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கனை பற்றி ஏராளமாக சொல்லலாம்.



1950ல் மீண்டும் சொந்த நாடு திரும்பும் முன் எல்லிஸ் ஆர் டங்கன் கொடுத்த சூப்பர் ஹிட் படம் 'மந்திரி குமாரி'. கருணாநிதி கதை வசனத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த  இந்த படமும் டிரண்ட் செட்டர் தான். நம்பியார் ராஜகுரு வேடத்தில் வில்லனாக கலக்கிய இந்த படத்தில் தான் "அன்னம் இட்ட வீட்டிலே, கன்னக்கோல் வைத்தே..." பாடல் வாயிலாக பின்னணி பாடகராக வெளிச்சத்துக்கு வந்தார், டிஎம் சவுந்தர ராஜன்.

1950க்கு பின் டிவி சீரியல்கள், ஹாலிவுட் சினிமா என அமெரிக்காவில் திரை வாழ்க்கையை தொடர்ந்த எல்லீஸ் ஆர் டங்கன் தான், முதன் முதலில் டார்ஜான் வகை படத்தை எடுத்தவர். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதினால் அதில், முதலாவது வெற்றிகரமான இயக்குநராக இருப்பவர், எல்லிஸ் ஆர் டங்கன் என்ற இந்த அமெரிக்கர்தான்.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: