Thursday 6 August 2020

அறிந்த பொக்கிஷம்... அறியாத பவளங்கள்... 9

கமலின் குணா படத்தில் ஒரு பாடல். "உன்னை நான் அறிவேன், என்னையன்றி யாரறிவார்... கண்ணில் நீர் வழிந்தால்... யாரிவர்கள் மாயும் மானிடர்கள்...", 30 விநாடிகளில் இழைந்து குழைந்து ஒலிக்கும் இந்த குரல் வழியே, குணாவில் தொடங்கி பின்னோக்கி பயணம் செய்தால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முந்தைய சினிமாவை நோக்கி அழைத்துச் செல்கிறது. எல்ஆர் ஈஸ்வரி போலவே ஆளுமையான அந்த குரல் வளத்துக்குச் சொந்தக்காரர், எஸ்.வரலட்சுமி. பாடகி மற்றும் நடிகை. குணாவிலும் கமலின் தாயாக அவர்தான் நடித்து பாடியிருப்பார்.



ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட எஸ்.வரலட்சுமி, 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் பால யோகினி. 1938ல் வெளியான அந்த படத்தில் துறவி வேடத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்.வரலட்சுமிக்கு, 1947ல் வெளியான எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி ஹீரோயினாக நடித்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்தில் 

முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. அதன்பிறகு சுமார் 55 ஆண்டு காலம் தமிழ், தெலுங்கு திரையில் இடைவிடாத நடிப்பு, பாடல் பயணம்.


ஜி.ராமநாதன் தொடங்கி எஸ்வி வெங்கட்ராமன், டிஆர் பாப்பா, எம்எஸ்வி, கேவி மகாதேவன், குன்னக்குடி வைத்தியநாதன், இளையராஜா வரையிலான இசையமைப்பாளர்களிடம் பாடி இருக்கிறார்,  எஸ்.வரலட்சுமி. அதிக அளவில் தெலுங்கு படங்களில் பாடி, என்டிஆர் போன்ற முன்னணி நடிகர்களின் ஹீரோயினாக நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவிலும் அவரது பங்களிப்பை ஒதுக்கி விட முடியாது.



ராஜராஜ சோழன் படத்தில் சிவாஜியின் மூத்த சகோதரி குந்தவி பிராட்டியாக நடித்து அவர் பாடிய பாடல்கள் "ஏடு தந்தானடி தில்லையிலே, அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே", "தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே". இதுபோல சிவாஜி, சிவகுமார், ஜெயலலிதா நடித்த கந்தன் கருணை படத்தில் இந்திராணியாக நடித்து "வெள்ளிமலை மன்னவா, வேதம் நீ அல்லவா..." பாடல். இவை எல்லாம் இன்றும் மனதை கொள்ளை கொள்ளும் ரகங்கள். 


வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜியின் ஜோடியாக ஜக்கம்மா ராணி வேடத்திலும் வரலட்சுமி நடித்திருக்கிறார். "சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே..." பாடல் இன்றும் முணுமுணுக்க வைக்கும். சிவாஜியுடன் ஜோடியாக நடித்தாலும் டூயட் அவருடன் பாடாத நாயகி எஸ்.வரலட்சுமி தான்.



எம்ஜிஆருடன் மாட்டுக்கார வேலன் படத்தில் மாமியாராகவும் (ஜெயலலிதாவுக்கு தாயார் வேடம்) நீதிக்கு தலைவணங்கு படத்தில் எம்ஜிஆரின் தாயாராகவும் நடித்த எஸ்.வரலட்சுமியின் "இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்..." தாலாட்டுப் பாடல் ஹிட் ரக வரிசையில் ஒன்று. ரஜினியின் அடுத்த வாரிசு (1983) படத்தில் ஜமீன்தாரி ராணியம்மா ராஜலட்சுமியாக நடித்தவரும் இவரே.


அரை நூற்றாண்டுக்கு மேல் இடைவிடாமல், அமைதியாக சினிமாவில் பயணித்த இவர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்ஜிஆர், விஎன் ஜானகி, ஜெயலலிதா, என்டிஆர், சிவாஜி, நாகேஸ்வர ராவ், ரஜினி, கமல் என திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்திருக்கிறார். மறக்க முடியா பாடல்களை பாடிய எஸ். வரலட்சுமியின் நடிப்பும் மறக்க முடியாததே. அதற்கு ஒரு உதாரணம் கே.பாலச்சந்தரின் பூவா தலையா படம்.



ஜெமினி, ஜெய்சங்கர் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்த அந்த படத்தில் மாமியாராக எஸ்.வரலட்சுமியின் வில்லத்தன நடிப்பு அபாரம். அவரது மேனரிசம், வசன உச்சரிப்பு, உடல் மொழிகளை எல்லாம் உற்ற கவனித்து பார்த்தால் ஒன்று புரியும். பூவா தலையா படத்தின் பாதிப்புதான், "கந்தா கடம்பா கதிர்வேலா" மற்றும் ரஜினியின் "மாப்பிள்ளை" படங்கள் என்பது. 

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் 55 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரம், நடிகை, பாடகி என இடைவிடாமல் பயணம் செய்த எஸ்.வரலட்சுமி, கவிஞர் கண்ணதாசனின் அண்ணி. கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஏஎல் சீனிவாசனின் இரண்டாவது மனைவி தான் எஸ்.வரலட்சுமி.

(பவளங்கள் ஜொலிக்கும்...)

#நெல்லை_ரவீந்திரன்

No comments: